சாயக்கழிவு ஆலைத் திட்டத்தைக் கைவிடவேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சாயக்கழிவு ஆலைத் திட்டத்தைக் கைவிடவேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

tami nadu

கடலூர் மாவட்டம், பெரியபட்டு கிராமத்தில் ஜவுளி பூங்கா என்ற பெயரில் சாயக்கழிவு ஆலைகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், அதனால் கிராமங்களில் நீராதாரம் நச்சாவதுடன், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பெருமாள் ஏரிப்பாசன நிலங்கள் மற்றும் பிச்சாவரம் சதுப்புநில அலையாத்திக்காடுகள் ஆகியவை பாதிப்புக்குள்ளாகும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (SIMA) என்ற பெயரில் இயங்கிவரும் தொழிலதிபர்களுக்கு சுமார் 450 ஏக்கர் விளைநிலம் ’99 ஆண்டு குத்தகை’ அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அடிப்படையில் சாயக்கழிவுகளைக் கடலில் கலக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கமெனத் தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

image

“சாயக்கழிவுகள் உரியமுறைப்படி சுத்திகரிக்கப்பட்டு  பயன்பாட்டுக்கு உகந்தநீராக வெளியேற்றப்படும் என்று சைமா அமைப்பினர் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே நொய்யல், பவானி, காவிரி ஆகிய ஆறுகள் இதுபோன்ற ஆலைகளின்  சாயக்கழிவுகளால் பாழாகியுள்ளன. அதனால் எழுந்த பொதுமக்கள் எதிர்ப்பு, நீதிமன்றத்தின் கண்டனம் ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இந்தக் கூட்டமைப்புதான், தற்போது இந்தத் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.   

மக்கள் எதிர்ப்பின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சாயக்கழிவு ஆலைகளுக்கான ஆரம்பப் பணிகளைத் தற்போது கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி மீண்டும்  தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறியுள்ள திருமாவளவன், “இந்த ஆலை அமையவுள்ள பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதி தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி. விவசாய நிலங்களின் பாதிப்பால் அதனையே நம்பி வாழ்ந்துவருகின்ற  விவசாய கூலித்தொழிலாளர்கள்  வாழ்வாதாரம் இழந்து புலம்பெயரவேண்டிய துயர நிலைக்கு ஆளாவார்கள்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

image

“எனவே, மத்திய மாநில அரசுகள் பொது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சாயக்கழிவு ஆலைக்கான அனுமதியை ரத்து செய்து இத்திட்டத்தை முற்றாகக்  கைவிட வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

….

Source: Pudhiya thalai murai

Read More >> சாயக்கழிவு ஆலைத் திட்டத்தைக் கைவிடவேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

Search

Back to Top