‘மாஸ்க்’-ஐ தொட்டாலே கொரோனா தொற்றலாம்! – எச்சரிக்கும் டாக்டர் இந்திரா நெடுமாறன்!
tami nadu July 19, 2020,
மாஸ்க் அணிந்துகொள்கிறார்களே தவிர பலரும் மூக்கு தெரியும்படி வாய்க்கும், இன்னும் சிலர், மாஸ்க்கை கூலிங் க்ளாஸ்போல் தலைக்கும் போட்டுக்கொண்டு உலாவுகிறார்கள். அதனால், மாஸ்க்கை எப்படியெல்லாம் பயன்படுத்தக்கூடாது? எப்படியெல்லாம் பயன்படுத்தவேண்டும்? என்று பிரபல டாக்டர். இந்திரா நெடுமாறனிடம் நாம் கேட்டபோது, ’மாஸ்க்கை தொட்டாலும் கொரோனா தொற்றலாம்’ என்று எச்சரிக்கிறார்.

மாஸ்க் அணியும்போது செய்யவேண்டியவை?
- கொரோனா பாசிட்டிவ், நெகட்டிவ், அறிகுறிகள் உள்ளவர்கள், அறிகுறிகள் இல்லாதவர்கள் என யாராக இருந்தாலும் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிவது பாதுகாப்பானது. மாஸ்க் அணிந்திருந்தால்கூட 6 அடி தூரத்தில் நின்றுதான் பேசிக்கொள்ளவேண்டும். மாஸ்க் அணிந்திருக்கிறோமே என்று அருகில் சென்று பேசக்கூடாது.
- கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மெடிக்கல் ஷாப்புகளில் விற்கப்படும் சர்ஜிகல் மாஸ்க்தான் அணியவேண்டும். துணி மாஸ்க் அணியக்கூடாது. 8 மணிநேரத்துக்கு ஒருமுறை மாஸ்க்கை கட்டாயம் கழட்டி பாதுகாப்பாக அப்புறப்படுத்தவேண்டும்.
- கொரோனா இல்லாதவர்கள் மாஸ்க்கை கழட்டும்போது மாஸ்க்கிலுள்ள ரப்பர் நூலை பிடித்துதான் கழட்டி குப்பையில் வீசவேண்டுமே தவிர மாஸ்க்கை கையால் தொடவேக்கூடாது. மாஸ்க்கின் முன் பக்கமும் பின்பக்கமும் தொடவேக்கூடாது. காதில் மாட்டப்பட்டிருக்கும் மாஸ்க்கிலுள்ள ரப்பர் நூலை வைத்துதான் அட்ஜஸ்ட் செய்யவேண்டும். காரணம், மாஸ்க்கில் கொரோனா கிரிமி தொற்றியிருந்தால் அது கையில் பட்டு நமக்கோ அல்லது மற்றவருக்கோ பரவலாம். அதேபோல், கொரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறிகள்; பாதிப்புகள் வெளியே தெரியாத ‘ஏ’ சிம்டமேட்டிக் நோயர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டால் அந்த வீட்டிலுள்ள அனைவரும் சர்ஜிகல் மாஸ்க் அணிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள், அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இன்னும் பாதுகாப்பாக விலகி இருக்கவேண்டும்.
- கொரோனா தொற்று இல்லாதவர்கள் சrஜிக்கல் மாஸ்க் அல்லது துணி மாஸ்க்கையே அணிந்துகொள்ளலாம். துணி மாஸ்க் பயன்படுத்தக்கூடிய பொதுமக்கள் குறைந்தபட்சம் ஐந்து மாஸ்க்காவது வாங்கிவைத்துக் கொள்ளவேண்டும். ஒருநாளைக்கு ஒரு துணி மாஸ்க் பயன்படுத்தவேண்டும். பிறகு, நன்றாக சோப்புப்போட்டு துவைத்து வெய்யிலில் காயவைத்து 3 நாட்கள் கழித்து பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
- மாஸ்க் நீண்டநேரம் அணிந்து முகத்தில் காயம் ஏற்பட்டால் வீட்டிற்கு வந்தபிறகு தேங்காய் எண்ணையோ, முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கும் க்ரீம்களையோ பயன்படுத்தலாம்.

டாக்டர் இந்திரா நெடுமாறன்
மாஸ்க் அணியும்போது செய்யக்கூடாதவை ?
- மாஸ்க்கை வாய்க்கு மட்டும் போட்டுவிட்டு மூக்குப்போடாமல் இருந்தால் நிச்சயம் கொரோனா தொற்றும். அப்படி பாதிப்பாதியாக மாஸ்க் அணிவதே பயனற்றது. அதேபோல், மாஸ்க்கை தொட்டுவிட்டு கண், மூக்கு, வாய் என முகத்திற்கு கையை கொண்டுபோகக்கூடாது.
- அனைவரும், என் -95 மாஸ்க் அணியவேண்டும் என்ற கட்டாயமில்லை. மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் அணிந்துகொள்ளலாம். குறிப்பாக, தூய்மைப்பணியாளர்கள் சர்ஜிக்கல் மாஸ்க்தான் அணியவேண்டும்.
- பல ஆண்கள் துண்டையும் பெண்கள் துப்பட்டாவையும் மாஸ்க்குபோல் வெளியிடங்களில் கட்டிக்கொள்கிறார்கள். அப்படி அணிபவர்கள் வீட்டிற்கு வந்ததும் கழட்டி வைத்துவிட்டு மீண்டும் வழக்கமான பணிகளில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள். அதிலும், கோரோனா தொற்றியிருக்கும் என்பதால், அப்படியே வைத்துவிடக்கூடாது. வெளியில் சென்று வந்தவுடன் அந்தத் துணியை நன்கு துவைத்து காயவைத்துதான் பயன்படுத்த வேண்டும்.
- கொரோனா விழிப்புணர்வு குறித்து ஒவ்வொருவரும் ஒரு எஸ்.எம்.எஸ்ஸை செய்யவேண்டும். ‘எஸ்’ என்பது சோஷியல் டிஸ்டன்ஸ், ‘எம்’ என்பது மாஸ்க், ‘எஸ்’ என்பது சேனிட்டைசேஷன் அதாவது சுத்திகரிப்பு. இந்த, மூன்றும் சேர்ந்ததுதான் எஸ்.எம்.எஸ்” என்று விழிப்புணர்வூட்டுகிறார் டாக்டர் இந்திரா நெடுமாறன்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
….
Source: Pudhiya thalai murai
Read More >> ‘மாஸ்க்’-ஐ தொட்டாலே கொரோனா தொற்றலாம்! – எச்சரிக்கும் டாக்டர் இந்திரா நெடுமாறன்!