ஜல்லிக்கட்டு: 'சிறுவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்' 

Uncategorized

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சிறுவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தின் கடைசி நாளில் காவல்துறையினர் இளைஞர்கள் மற்றும் மாணவர்களைக் கலைக்க தடியடி நடத்தியதை தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும், சாலை மறியல்களும் பொதுமக்களால் நடத்தப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டங்களை வேடிக்கைப் பார்க்கச் சென்ற அந்தந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்தது மட்டும் இன்றி வன்முறையில் ஈடுபட்டனர் என்றும், கொலை முயற்சி, ஆயுதங்கள் மூலம் சேதப்படுத்துதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவர்களை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல்  கடுமையாகத் தாக்கியுள்ளனர். 

தமிழக சட்டப்பேரவையில் மெரினா விவகாரம் குறித்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டு அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள் என்று அறிவித்தார். ஆனால் 9, 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ போன்ற வகுப்புகளில் பயின்றுவரும் மாணவர்களை சம்பந்தமே இல்லாத வேறு சரகத்தைச் சேர்ந்த காவல்துறையினர், நள்ளிரவில் பயங்கரவாதிகளைக் கைது செய்வது போன்று கைது செய்துள்ளது என்பது, சிறுவர்களுக்கான உரிமைமீறல் ஆகும். பொதுத் தேர்வுகள் நெருங்கிவரும் நிலையில், நீதிமன்றத்திற்கும் காவல்நிலையத்திற்கும் மாணவர்களை அலைக்கழிப்பது அவர்களின் கல்வித் தரத்தையும், மனநிலையையும் பெரிதும் பாதிக்கும். எனவே, சிறுவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top